வியாழன், 4 செப்டம்பர், 2014

நீ இல்லா வீடு.....














நீ விட்டுவிட்டுப் போன
உன் கிராமத்துத் தெருமுனையில்,
அணைந்து எரிகின்ற
ஒற்றை விளக்கடியில்
குரைத்து,
பின் அடங்கிப்போன 
அந்த நாயுடன்
நான் மட்டும்,
உன் வீடு பார்த்து......!

நீ விட்டுச் சென்ற காற்றின்
வாசனை தொட்டுப்
பரவசப்படுகிறது என் மூச்சு!

உடல் தரித்து
இதுவரை அறியாததாய்,
ஒவ்வொரு அணுவிலும்
உயிர்க்காற்றின்
புத்தூட்டம்...!

எத்தனை முறை
நான் நிற்கும் இந்த இடத்தை
நீ மிதித்துக்
கடந்து போயிருப்பாய்.....?
என் கால்கள்
புனிதப்பட்டிருக்கும்!

இதோ 
இருள் படிந்து கிடக்கும்
இந்த முற்றத்தில்
நிலாச் சோறுண்டு.....
 மழை பெய்த 
நீர்க் காட்டில்
துளிப்பூவின்
விதை தேடி...... ,
மண்மீது விளையாடி,
மரம் தொட்டுக்
கதை சொல்லி,.......
முகம் பார்த்து அழகாக்கி......
முடி பின்னத் தலை சீவி......
சிரித்து...
அழுது...
உறங்கி...
விழித்து...
எனத் திரளும் உன்னைத்
தேடித் தொகுக்க,
எங்கணுமாய்க் கண்காட்டும் 
உன் மாய பிம்பங்கள்,

மெல்லப்
பெருகும்,
இலட்சமாய்.....!
கோடியாய்.....!


இன்று வரை,
நீ விலகியும்,
உன் நினைவுகளோடுதான் இருக்கிறது ,
உன் வீடு..........
என்னைப் போலவே!



.

15 கருத்துகள்:

  1. நீ இல்லா வீட்டில் தேடித் தேடித் பார்த்தாலும் நீ தென்படவில்லை. நீங்களே!
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா!

    ”நீ இல்லா வீடு” எப்படி என் கண்களிலிருந்து தப்பியது?...

    விடுபட்ட யாவும் விரைந்தெனைச் சூழ!
    உடையுதே கண்கள் உகுத்து!

    அருமையான வரிகள்! என்னை என் ஊர்ச் சிந்தனையில்,
    கடந்தகால வாழ்க்கைத் தடத்தில் சிக்கவைத்தது!

    உளந்தொட்ட கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி

      நீக்கு
  5. மனம்கொண்டபுரத்தின் மற்றொரு சாளரத்தின் வழி இப்போது பார்க்கிறேன்.விளக்கு கிடைத்தபின் இன்னும் துல்லியமாய் அறியமுடிகிறது இந்த மாடத்தின் உள்ள இருபவற்றை. காலம் ஏறஏற அழகுகூடிகொண்டே போகின்றன சில கலைப்பொருட்கள்:)

    பதிலளிநீக்கு
  6. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

    http://blogintamil.blogspot.in/2014/11/gdh.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    பதிலளிநீக்கு
  7. நிஅன்வுகளோடு இருப்பதும் சுகமே/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!

      நீக்கு
  8. இன்று வரை,
    நீ விலகியும்,
    உன் நினைவுகளோடுதான் இருக்கிறது ,
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    என்னைப் போலவே!
    உண்மை வரிகள்.

    பதிலளிநீக்கு
  9. எங்கணுமாய்க் கண்காட்டும்
    உன் மாய பிம்பங்கள்,....அழகு

    பதிலளிநீக்கு

உங்கள் சுவடுகள் தடங்களாகட்டும்.