வெள்ளி, 8 ஜனவரி, 2016

பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1.1


இந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட, “பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள்பகுதி – 1. என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், சொல்லாராய்ச்சிகளும் இந்த வலைப்பூவில் இனித் தொடர்ந்து இடம் பெறும். இது பொது வாசிப்பிற்கு உரியதன்று. பழைய உரைகளைப் படிக்கப் பேரிடர் பட்ட என்னைப் போன்றோர்க்கு ஓரளவேனும் உதவும் பொருட்டே இதை  இங்குப் பதிந்து போகிறேன்.

பெரிதும்  தலையை உடைத்துக் கொண்டு படித்துப் பார்த்ததில் எனக்குச் சரியெனப்படுவதையே நச்சினார்க்கினியரின் உரைக்கு உரையாக இங்கு எழுதிப்போகிறேன். இதில் மாறுபட்ட கருத்துகள் இருப்பின் அறியத் தாருங்கள். இப்பதிவுகளைத் தொடரும் தமிழார்வலர்களுக்கு அவை நிச்சயம் உதவும்.

கலித்தொகைக்கு உள்ள நச்சினார்க்கினியரின் உரை சிறப்பு வாய்ந்தது. எனினும் பாடலைப் படிப்பதுபோலவே உரையைப் படிப்பது சற்றுக் கடினமானது. அயர்வு தரக் கூடியது.

இ.வை. அனந்தராமையர், பெருமழைப்புலவர், இளவழகனார், போன்றவர்கள் நச்சினார்க்கினியரின் உரையுடன் ஆங்காங்கே தங்களின் குறிப்புகளை அளித்துள்ளார்கள். அவை முழுவதுமாய் இல்லை என்பதோடு உரையில் நமக்கு ஐயம் தோன்றும் இடங்களில் அவர்களின் விளக்கங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் அல்லாமல், அவர்கள் அளித்துள்ள குறிப்புகளோடும் ஏன் நச்சினார்க்கினியரின் உரையோடுமே  சில இடங்களில் நாம் மாறுபட வேண்டி உள்ளது.

இதுவே உரைக்கு உரையெழுத வேண்டியதன் கட்டாயத்தில் நாமிருக்கக் காரணம்.

இங்கு,

கலித்தொகையின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு துறை குறிப்புக் கொடுக்கப்படுகிறது.

இந்தக் கலித்தொகைப் பாடல்கள் அனைத்தும் கூத்திற்கு உரியவை. எனவே, சுவடிகளில் இதன் துறைக்குறிப்பு, பாடலுக்கு முன்புதான் குறிப்பிடப்பட்டிருந்தது.

கலித்தொகையை முதன்முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களின் பதிப்பில் இம்முறையிலேயே பதிப்பிக்கப்பட்டிருந்தது.

ஏனைய எட்டுத்தொகை நூல்களில், திணை துறை குறிப்புகள் பாடலின் பின் அமைந்துள்ளதன் அமைதி கருதி, கலித்தொகையின் துறைக்குறிப்புகளையும் பாடலுக்குப் பின்னர் அதற்கடுத்தடுத்த பதிப்புகளில் அமைத்துக் கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் இது சரியானதன்று.

ஏனெனில், ஒரு கூத்திற்கான பாடல் இது என்றவகையில், அதன் பின்புலம் பாத்திரங்கள், காட்சி இவற்றை விவரிக்கும் இத் துறைக் குறிப்புகள் பாடலின் முன்பு அமைவதே பொருத்தமானதாய் இருக்க முடியும்.

இவை ஒரு புறம் இருக்க,

சங்கப்பாடலுக்குத் திணை துறை குறிப்புகள் பாடலைத் தொகுத்த காலத்தில் வகுப்பப்பட்டனவா அல்லது பின்பு அதற்கு உரையெழுதிய உரையாசிரியர்களால் வகுக்கப்பட்டனவா என்கிற விவாதம் தமிழ் ஆய்வுலகில் தொடரும் நிலையில், கலித்தொகைக்கு துறை வகுத்தவர் நச்சினார்க்கினியரே என்று நாம் உறுதியாகக் கூறமுடியும். அதற்குக் காரணங்களைத் தனியே பின்னர் காண்போம்.

நாம் பார்த்த கலித்தொகைக்கான நச்சினார்க்கினியரின் உரை, அவரது துறைக்குறிப்புகளுடன் இப்படித் தொடங்குகிறது.

இஃது
 "ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெய,
ராவயின் வரூஉங் கிழவரு முளரே"
என்னும்  சூத்திரத்தில் ‘திணைநிலைப் பெயராகிய கிழவருங் கிழத்தியரும் உளர் என்னும் விதியாற்கொண்ட அத்தலைவிக்கு அவள் தோழி ஆயர் ஏறுதழுவுகின்றமைகாட்டி அவள் அதுகண்டு வருந்தாமல் ஆண்டுப் பெற்ற நன்னிமித்தங் கூறித்தெளிவித்து, அதனை அவ்விதியாற்கொண்ட தலைவற்குங்கூறி, மீட்டும் அத்தலைவிக்குத் தஞ்சுற்றத்தார் கூறியிருக்குங் கூற்றினையுங் கூறி, தலைவனும் இன்னும் ஒருஞான்று ஏறுதழுவி நம்மை வரைந்துகொள்வனென்று ஆற்றுவித்தது.

துறை விளக்கம்.

நச்சினார்க்கினரியர் எடுத்துக்காட்டும் தொல்காப்பியச் சூத்திரம் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணை இயலில் 21 ஆம் சூத்திரமாக எடுத்துக் காட்டப்படுவது.

இச்சூத்திரம், ஆயர், வேட்டுவரிலும், ( முல்லை, குறிஞ்சி நில மக்கள் ) திணைநிலைப் பெயரால் அழைக்கப்படும் தலைமக்கள் உள்ளனர் என்னும் பொருள்படுவது.

எனவே முல்லைநிலத் தலைவியின் தோழி, ஆயர்கள் ஏறு தழுவும் காட்சியைத் தலைவிக்குக் காட்டி, அதைக்கண்டு வருந்த வேண்டாம் எனவும் அவளுக்குச் சில நல்ல நிமித்தங்கள் பட்டதாகவும் கூறி அவளது கலக்கத்தைத் தெளிவிக்கிறாள்.

பின் தலைவனிடம் சென்று அந்த நன்னிமித்தத்தைக் கூறுகிறாள்.

மீண்டும் தலைவியிடம் வந்து, ‘ஏறு தழுவுபவன் யாராய் இருந்தாலும் அவனுக்கு உன்னை மணமுடிததுக் கொடுப்பார்கள்’ என்று தலைவியின் வீட்டார் உறுதிபடக் கூறி இருப்பதைச் சொல்லி, நிச்சயம் தலைவன் ஏறு தழுவி உன்னை மணந்து கொள்வான் என்று அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

இதுதான் இந்தப்பாடலின் சாரம். பின்புலம் உட்கருத்து எல்லாமே.

இங்கு  ஏறுதழுவுதலைக் கண்டு தலைவி ஏன் வருந்த வேண்டும்?

தோழிக்கு பட்ட நன்னிமித்தங்கள் என்ன?, என்பதையெல்லாம் காண நாம் பாடலின் உள் நுழைந்தாகவேண்டும்.

முல்லைக் கலியில் நாம் பார்த்த பகுதியும் அதற்கான நச்சினார்க்கினியரின் உரையும் அதற்கு இன்றைய தமிழிலான விளக்கத்தையும் இனிக்காணலாம்.

பாடலில் நாம் ஏற்கனவே கண்ட பகுதி இது,

தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;
மணி புரை உருவின காயாவும்; பிறவும்;
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபுடன் ஒருங்கு
அவ்வழி,முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ

இவ்வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரை.

“மழையைப் பெறுகின்ற குளிர்ந்த நிலத்தே நின்ற கார்காலத்து முற்பட்ட மழைக்கு அரும்பீனாநின்று முன்பு உலர்ந்த முதலிடத்தே தழைத்த முள்ளைப் புறத்தேயுடைய பிடவம்பூவும்,  கள்ளுண்டு களித்தலுற்றவ னிலைமைபோல அசைந்து வளைந்து துடுப்புப்போலும் முகையை முன்னர் ஈன்று, பின்னர்த் தீயைக் கடைந்து, அதிற்பிறந்த நெருப்பைச் சேரநிரைத் தாற்போன்ற அலர்ந்த இதழினையுடைய செங்காந்தட்பூவும், நீலமணியை யொக்கும் நிறத்தினையுடையனவாகிய  காயாம்பூக்களும் பிறவும் அழகுகொள்ளும்படி சூடிய கண்ணியையுடையவர் சேரத்தொக்கு ஏறுதழுவுவாரோடே மாறுபடுதலை ஏறட்டுக்கொண்ட தம் மைந்தினைச் சேரநிறுத்துதற்கு மகட்கொடை நேர்ந்த ஆயர் சேரக்கூடி, பிறராற் சீறுதற்கரிய வலியினையுடைய இறைவனுடைய குந்தாலிப்படைபோலே கூரிதாகக் கொம்புகளைச் சீவி, ஏறுகளைச் சேரத் தொழுவிடத்தே புகுதவிட்டார்.

அவ்விடத்து ஏறுகளைத் தழுவிப் போக்கும்படியை உட்கொண்டு வந்து வந்து திரண்டு மழைமுழக்கென்ன இடியென்ன நடுவானநிலத்தின் முன்னே ஆரவாரமெழப் புகையொடு துகள் எழ ஏறுதழுவினார்க்குக் கொடுத்தற்கு நல்லமகளிர் திரண்டுநிற்ப நீர்த்துறையிலும்    ஆலமரத்தின் கீழும் பழையவலியினையுடைய மராமரத்தின்கீழும் உறையுந் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைப்  பரவித் தொழுவிலே பாய்ந்தார்.

உரைக்கான விளக்கம்.

மழைப்பொழிவால் குளிர்ந்துள்ள நிலத்தில் (கடுங்கோடையில் காய்ந்து) உலர்ந்த முட்களை உடைய பிடவம், கார்காலம் தோன்றுவதற்கு அறிகுறியாய்ப் பெய்யும் (இம்)மழையால் தழைத்திருக்கிறது. அப்பிடவத்தின் பூவும்,

மதுவருந்தித் தன்னிலை இழந்தவன் தள்ளளாடுவதுபோல அசைந்து நெளிந்து, முதலில் துடுப்புப் போன்ற மொட்டினையும் பின்பு, தீயை உருவாக்கக் கடையும்போது அதில் உருவாகும் நெருப்புப் பொறிகளைத் திரட்டி உருவாக்கியது போன்ற மலர்ந்த இதழ்களையும் உடையதாக இருக்கிறதே செங்காந்தள்; அக்காந்தளின் பூவும்,

நீல நிற மணிகளைப் போலத் தோற்றமளிக்கும் காயா மரத்தின் பூவும்,

பிற பூக்களுமாக,  

அழகான மாலையை அணிந்து ஏறுகளை எதிர்கொண்டு தம் வலிமையைத்  ( மைந்து ) தக்கவைத்துக் கொள்ளவதற்காக  வீரர்கள் நிற்கின்றார்கள். (ஏறு தழுவுபவனுக்கு தம் பெண்ணைக் கொடுக்க ) ஆயர்கள் ஒன்று கூடிப் பிறரால் அழிப்பதற்கு அரிதான, இறைவனுடைய ( சிவபெருமானுடைய ) குந்தாலி என்னும் ஆயுதம் போலக் கூர்மையாகச் சீவப்பட்ட கொம்புகளை உடைய மாடுகளை தொழுவில் இறக்கிவிடுகிறார்கள்.

அத்தொழுவிலே ஏறுகளைத் தழுவி அடக்கும் எண்ணத்துடன்  வந்துவந்து சேர்ந்த வீரர்களாலும் ( ஏறுகளாலும் ) மழை முழக்கம் போலவும் இடியோசை போலவும் ஆரவாரம் எழுகிறது. அங்கு நறும்புகையோடு (மண்) துகள் எழுகிறது.

ஏறுதழுவினவர்களுக்கு மகளைக் கொடுக்க விரும்பிய ஆயர்களும்  நல்லோராகிய அவர் பெண்களும் ( அங்கு ) நிற்கிறார்கள்.

ஏறுகளைத் தழுவுவதற்காய், நீர்த் துறையிலும், ஆலமரத்தின் கீழேயும், பழைமையான வலிய மராமரத்தின் கீழும் வீற்றிருக்கும் தங்கள் தெய்வங்களுக்கு வேண்டியன செய்து அத்தெய்வங்களை வணங்கிய வீரர்கள், காளைகளை அடக்கக் களத்தில் இறங்குகிறார்கள்.

(பதிவின் வரம்பு எல்லை கடந்து போகும் என்பதால் நச்சினார்க்கினியரின் உரையில் உள்ள இலக்கணக் குறிப்புகளைத் தவிர்த்திருக்கிருக்கிறேன்.)

இனிக் கொஞ்சம் சொல்லாராய்ச்சி.

முல்லைக் கலியின் முதற்பாடல் “ தளி ” என்ற சொல்லோடு  தொடங்குகிறது.

தளி என்றால் மழை.

மழை கொண்டு தொடங்கும் முதல் அடியில் மீண்டும் மழை பெய்கிறது.

தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பீன்று

தலைப்பெயல் – இதுவும் மழையைக் குறிக்கும் சொல்தான்.

ஆனால் இச்சொல் பொதுவாக எல்லா மழையையும் குறிக்காது.

கடுங்கோடைக்குப் பின், மழைக்காலம் தொடங்கிவிட்டது என்பதற்கு அறிகுறியாகப்  பெய்யும் முதல் மழைக்குத்தான் தலைப்பெயல் என்று பெயர்.

தடவுபு - வளைந்து.

ஞெலிபு – கடைந்து

ஞெகிழ் - நெகிழ்

நறை – மணமுள்ள மரங்களான சந்தனம் அகில் போன்றவற்றை எரிப்பதால் உண்டாகும் புகை.

மைந்து – வலிமை.

சமம் – ஏறு தழுவல் நிகழுங் களம்.


களம் புகுந்த வீரர்கள் நிலை என்ன?

தலைவி ஏன் கலங்கினாள்?

அவள் காதலனுக்கு என்ன நேர்ந்தது?

அறியக் காத்திருங்கள்.

பட உதவி - நன்றி https://scontent-sjc2-1.xx.fbcdn.net/

12 கருத்துகள்:

  1. படித்தேன், அறிந்தேன் நண்பரே. இப்போதெல்லாம் ஞகரம் பயன்பாட்டில் மிக மிகக் குறைந்த அளவே உள்ளது. நண்டு கூட ஞண்டு என்று அறியப்பட்டது ஆச்சர்யம். தொடர்கிறேன்.
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே!

      இத்தளத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்.

      ஞகரம் நகரத்தோடு உறழ்ந்தது உச்சரிப்பால் நேர்ந்ததுதான்.

      சில எழுத்துகளின் சரியான ஒலிப்பு முறையைத் தவறான உச்சரிப்புகளால் இழந்திருக்கிறோம்.

      பின்னர், அது எழுத்து மொழியிலும் நுழைகிறது.

      தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி !

      நீக்கு
  2. ஆகா! புதுமையான முயற்சி ஐயா! இதுவரை, இருவேறு வகையான பதிவுகளுக்காகத் தனித் தனி வலைப்பூக்கள் நடத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய பதிவுகள் பரவ வேண்டும் என்பதற்காக ஒரே வலைப்பூவை இருவேறு வகைத் தளங்களில் (பிளாகர், வேர்டுபிரசு) பதிவு செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பொதுமக்களுக்காக ஒரு வலைப்பூவும் அடுத்த கட்ட வாசிப்பை விரும்புவோருக்காக ஒரு தனி வலைப்பூவும் நடத்துவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்! அதுவும் ஒரே விதயம் பற்றி, ஒரே தலைப்பில் இருவேறு பதிவுகள்! தூள்!

    பதிவு நன்றாக இருந்தது. ஆனால், பொது வாசிப்பிற்காக அன்று என நீங்கள் வகைப்படுத்தியிருந்தாலும் பொதுமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையானதாகவே அமைந்திருந்தது. எனக்கே புரிகிறதே!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம்.

      ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப் படும் இக்கலித்தொகை சார்ந்த பதிவுகளைவிட இங்கு பதியும் பதிவுகளில் என் உழைப்பும் பாடுகளும் அதிகமாகவே இருக்கும்.

      நான் பொதுவாசிப்பிற்கு உரியதன்று என்று எழுதியிருப்பதன் காரணம், அங்கு அதனைப் படித்தவர்களுக்கு மீண்டும் இங்குவந்து ஒரே பதிவைப் படிக்கிறோமே என்ற அலுப்பினை ஏற்படுத்தக் கூடாது என்பதனால்தான்.

      அன்றியும் பொதுவான வாசிப்பென்பது வேறு. பழந்தமிழ் இலக்கியங்களுக்கான மரபுரைகளை வாசிப்பதென்பது வேறு.

      பொழுதுபோக்கு வாசிப்பு என்பதைக் கடந்து, தமிழில் சற்றேனும் ஈடுபாடும் தேடலும் இல்லாதவர்களுக்கு இவ்விடுகைகளால் பயனிராது என்று நான் கருதியதாலேயே பதிவின் முகப்பில் அவ்வாறெழுதினேன்.

      “ எனக்கே புரிகிறதே ”

      என்று நீங்கள் சொல்வது உங்களுக்கே அதிகமாகத் தெரியவில்லையா?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      இத்தளத்தைத் தொடரவுக் கருத்துரைக்கவும் வேண்டுகிறேன்.

      நீக்கு
  3. ஆஹா இதுவும் நல்ல முயற்சியே, அடுத்த கட்ட வாசிப்பிற்காக இதுவா ம்..ம் நல்லது. பார்க்கலாம், நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் புரிகிறதா என்று.
    ஹா ஹா...... என்ன சிரிப்பு இந்த மரமண்டைக்கு எங்கே ஏறப் போகிறது என்று தானே.ம்..ம் எதற்கும் இருங்கள் மற்றைய பதிவை பார்த்து விட்டு வருகிறேன். ok வா.

    இத்தளமும் சிறந்து விளங்க என் வாழத்துக்கள் ..! தொடருங்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அம்மா!

      உங்கள் வருகையும் நீங்கள் காட்டும் ஆர்வமும் பெரிது.

      தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. அப்பாடா ஒரு மாதிரி வாசித்து முடித்தேன். தாங்களே பேரிடர்ப் பட்டு வாசித்தீர்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். இருந்தும் எத்தனை ஈடுபாடு இருந்திருந்தால் இதை எல்லாம் வாசித்து முடித்து இருப்பீர்கள் அம்மாடி எத்துணை ஆர்வம் . ம்..ம் நினைக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க தமிழ் கோஷமிட வேண்டும் போல் இருக்கிறது. ஹா ஹா ....

    நச்சினார்க்கினியரின் உரையே இவ்வளவு கடினம் என்றால் நாம் தான் என்ன செய்வது. ம்..ம் அவர் உரைக்கே உரை எழுதுவதும் கடினம் தான் இல்லையா அப்படி இருக்க. எமக்காக அதற்கு இலகுவாகப் புரியும் படி உரையும் எழுதி எம்மையும் இவற்றை ஈடுபாட்டுடன் ஈடுபட வைப்பதும் அரும் செயலே.
    தங்கள் மற்றைய தளத்தில் போதிய விளக்கங்கள் அளித்து இலகுவாகப் புரிய வைத்தமையாலும். அதை ஏற்கனவே பல தடவை வாசித்து உள்வாங்கியமையாலும் இதுவும் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருந்தது. ஆகையால் நான் தொடர்கிறேன் இத் தளத்தையும். நன்றி ! எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பதிவுக்கு மிக்க நன்றி தொடர வாழத்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.

      உங்களின் வருகையும் தொடர்ச்சியும் அளிக்கின்ற ஊக்கமும் காணும்போது இன்னும் எழுதலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

      தங்களின் வாழ்த்துகளோடு நிச்சயம் தொடர்கிறேன் அம்மை!

      நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோ!
    இன்று தான் முதன்முதலாக இத்தளத்துக்கு வருகிறேன். மனம்கொண்டபுரம் என்பது மனங்கொண்டபுரம் என்றிருக்கவேண்டாமா? இது என் ஐயமே!
    இதைப் பொறுமையாக ஆற அமர படிக்க வேண்டும் என்பதால் கால அவகாசம் கூடுதலாக எடுத்துக்கொண்டேன். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக இத்தொடரும் மிக எளிமையாகப் புரியும் விதத்தில் தான் உள்ளது. நச்சினார்க்கினியரின் கடின உரையைக் கூட எங்களைப் போன்றோருக்குப் புரியும் விதமாக எழுதியிருக்கும் உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்! ஏனெனில் உங்களைப் போல நாங்கள் தலையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை!
    எனவே இது பொது வாசிப்புக்குரியதன்று என்ற வரியை அருள் கூர்ந்து நீக்கிவிடக்கோருகிறேன். இது வாசிக்க வருபவர்களின் ஆர்வத்தைக் குறைப்பதாக உள்ளது. உரையாசிரியர்களின் உரையைப் புரிந்து கொள்ளவும் சொல்லாராய்ச்சியில் ஈடுபட விரும்புவோர்க்கும் இத்தொடர் உதவி செய்யும் என்று சொன்னால் போதும். ஆர்வம் இருப்பவர்கள் மட்டும் தானே தொடரப் போகிறார்கள்?
    கலித்தொகை பாடல்கள் கூத்திற்கு உரியவை என்றறிந்தேன். கூத்து என்பதால் துறைக்குறிப்புகள் முன்பாக அமைய வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரி. கலித்தொகைக்குத் துறை வகுத்தவர் நச்சினார்க்கினியர் என்பதற்கு நீங்கள் சொல்லப்போகும் காரணங்களை அறிய ஆவல்.
    தமிழில் முனைவர் பட்டம் பெற சமர்ப்பிக்கப் படும் ஆய்வுக்கட்டுரைகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும், உங்கள் ஆய்வு முடிவுகள்!
    ஒரு முறை எனக்குத் தெரிந்தவர் ஒருவர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க இருந்தார். ஆர்வக்கோளாறில் நான் ஒரு முறை படித்துத் தருகிறேன் என்று அவரிடமிருந்து வாங்கிப் படித்தேன். ஏன் படித்தோம் என்றாகிவிட்டது. அவ்வளவு தரக்குறைவான கட்டுரை! அன்றிலிருந்து நம் பல்கலைக்கழகங்கள் அளிக்கும் பட்டத்தின் மீதே எனக்கு அவநம்பிக்கை வந்துவிட்டது! எல்லோரும் இப்படி எழுதுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது போன்ற கட்டுரைகளும் முனைவர் பட்டத்துக்கு ஏற்கப்படுகின்றன என்பது தான் என் அதிர்ச்சிக்குக் காரணம்!
    தலைப்பெயல் எவ்வளவு அழகான பொருத்தமான சொல்!
    அருமையான கட்டுரை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி சகோ! ஆர்வம் குறையாமல், உங்கள் இந்த முயற்சி தொடர வேண்டும்!
    த ம வாக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ!

      தங்களை இத்தளத்திற்கு வரவேற்கிறேன். உங்களின் ஆர்வமும் வாசிப்பும் வியப்பளிக்கிறது.

      மனம்கொண்டபுரம் என்பது, மனங்கொண்டபுரம் என்றே புணர்ச்சியில் அமையும்.

      இந்தப்பெயரை நான் தேர்வு செய்த சூழல் வித்தியாசமானது. எனக்கு அப்பொழுது இப்படி வலைப்பூ என்று ஒன்று இருக்கிறது, அறிஞர்கள் எழுத்தாளர்கள் என இயங்கும் புலமொன்று இருக்கிறது என்பதெல்லாம் கொஞ்சமும் தெரியாது.

      ஆங்கிலத்தில் தளப்பெயரைத் தேர்ந்து அதற்கேற்பவே தமிழில் மனம்கொண்டபுரம் என்று அமைத்துக் கொடுத்தார்கள். அப்பொழுது எனக்குத் தமிழ் தட்டச்சும் தெரியாது.

      புரிதல் எளிமைக்காகவும் அப்படியே தொடர்கிறேன். இருப்பினும் தாங்கள் சொன்னதே சரியான வடிவம்.

      “பொது வாசிப்பிற்குரியதன்று ” எனக் குறிப்பிட்டமைக்கான காரணத்தைத் திரு. ஞானப்பிரகாசம் ஐயா அவர்களின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

      இனிவரும் பதிவுகளில் அவ்வாறு குறிப்பிடாமல் எழுதுகிறேன்.

      ஆய்தல் என்பதற்கு “ உள்ளதன் நுணுக்கம் ” என்று வரையறை கூறும் தொல்காப்பியம்.

      கோயில்களில் அமைந்துள்ள சிலைகளைக் காணாமலே கடந்துபோகும் பார்வை இருக்கிறது.

      அதன் அருகில் சென்று சற்று நின்று பார்த்துப் பின் கடக்கும் பார்வை இருக்கிறது.

      அச்சிலை அணிந்திருக்கும் அணிகலன்களில் கண்ணூன்றும் பார்வை இருக்கிறது.

      அதில் ஏதேனும் ஒரு குறிப்பிட அணிகலனை மட்டும் ஊன்றிப் பார்க்கும் பார்வை இருக்கிறது.

      அவ்வணிகலனில் உள்ள ஒரு இழையை அல்லது ஒரு கண்ணியில் பார்வையைப் பதித்தல் இருக்கிறது.

      அந்த ஒரு கண்ணியை/இழையை எடுத்துக் கொண்டு பிறவற்றுடன் ஒப்பு நோக்கியும் வேற்றுமை கண்டும், கண்டன தொகுத்தும், கருத்துரைத்தும் போவதைப் போன்றதைத்தான் “ உள்ளதன் நுணுக்கம் காணல் ” என்கிறது நம் இலக்கணம்.

      மொழியாய்வுக்கு இத்திறம் அதிகம் வேண்டப்பெறுவது.

      அதற்கு ஆர்வமும் உழைப்பும் இருக்க வேண்டும்.

      தங்களின் வருகையையும் தொடர்ந்த கருத்துகளையம் இத்தளத்தின் பதிவுகளுக்கு வேண்டுகிறேன்.

      நன்றி.

      நீக்கு
    2. அப்பப்பா! ஆய்வுப் பார்வையில் தான் எத்தனை விதம்? ஒரு கண்ணியை எடுத்துக்கொண்டு பிறவற்றோடு ஒப்பு நோக்கியும், வேறுபடுத்தியும், கண்டவற்றைத் தொகுத்தும், கருத்துரைத்தும் போவதைத்தாம் உள்ளதன் நுணுக்கம் என்று நம் இலக்கணம் சொல்கிறது என்று வெகு அழகாய்ச் சொன்னீர்கள். மொழி ஆய்வுக்குத் தேவையான ஆர்வமும் உழைப்பும் உங்களிடம் அளவுக்கதிகமாகவே இருக்கின்றது சகோ!.
      உங்கள் ஒவ்வொரு பதிவின் மூலமும் நான் கற்பது அதிகம். உங்கள் இந்த முயற்சியும், ஆர்வமும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே என் அவா. இதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது!

      நீக்கு
  6. வணக்கம் ஐயா

    எங்கே என் பின்னூட்டம்????

    நன்றி,

    பதிலளிநீக்கு

உங்கள் சுவடுகள் தடங்களாகட்டும்.