சனி, 16 ஆகஸ்ட், 2014

பஞ்சில் கனலின் பொறி.

வெந்து நீர்ந்தொரு
பிரசவம் முடிந்த களைப்பில்
குருதி தோய்ந்த மாலை
உன்னைப் பார்த்த பொழுதாயிருக்கும்!
எல்லோரும் புகழ்ந்து பேசும்
உன்னோடு
போட்டியிடுதற்கே ஆயிருந்ததென் புறப்பாடு!
உரிய ஆயுதங்களும், கவசங்களும்,
எடுத்து வைத்திருக்கிறேன்!

நான்
புறப்படும் முன்பாகவே
சமரசத்திற்குத்தான் வந்துள்ளனர் 
இதுவரை நான் எதிர்கொண்டோர் அனைவரும்!

நீ வரவில்லை!

ஆகப்
புழுதி கிளப்பி வரும்
என் புரவிகளின் குளம்பொலிகள்,
இனி
நீ சரணடையப்
போதுமாயிருக்கும்!

ஆனால்,
அதையும் அலட்சியப்படுத்தி
என்னை எதிர்கொள்ள
நீ தனியே காத்திருந்தாய்!

படிக்கப்பட்ட
என் மெய்க்கீர்த்திகளைக்
கிழித்து
நீ குப்பையிலெறியப்
பற்றியது ஆடுகளம்!

வீரம் பேசிய என் கட்டியங்காரனின்
நாவறுத்துப் போனதுன் கணையொன்று!
அதிலிருந்து
களம் பீய்ச்சப் பெருகும் வன்மம் தெளித்து
என் பிதாமகர்களை அனுப்பி வைக்கிறேன்,
உன்னுடன் பொருத...!

ஆயிரம் யானை அமரிடைவென்ற
பட்டையக்காரர்கள்
உன் வாள் முனையில் மண்டியிட்டுத்
தோற்றே திரும்புகின்றனர்,
ஒவ்வொருவராய்......!


வீரம் பேசி என்னைக்
காக்கப் புறப்பட்ட கேடயம்
உன்முன்
பிச்சைப் பாத்திரமாய்க்
கையேந்தி
உயிர் பிழைத்தோடுகிறது!

அலங்காரம் மிகுந்திருந்த
என் மாளிகைகளைச்
சிறு நொடியில்
வெறும் கல்லும் மண்ணும் சுதையுமாய்க்
கலைத்திடுகிறாய்!
அதனுள் அருகதையற்றமர்ந்து,
கிரீடம் தரித்து,
மந்திரிகளாய் ஆலோசனை
சொன்னவை
வேடம் கலைத்து
ஊர்ந்து ஒளிகின்றன
இராமபாணப் பூச்சிகளாய்!


இறுதியாய்
அந்தி மயங்கத்
தருணம் பார்த்துக்
கடைசி அஸ்திரமாய்
இருள் கிழித்துக்
குருடாக்கும் ஒளிபரப்பும்
முழுநிலவொன்றை
உன் முன் எறிகிறேன்!
அது கடித்துப்
பிறையாய்த் துப்பி
அகண்ட சூனியமொன்றைப்
படைக்கப் பெரும்பொழுதாகவில்லை உனக்கு!

துயர் தாளாமல்
வெறிபிடித்துக் குரைக்கும்
என் வாசிப்புகளும்
உன் சின்ன அதட்டலில்
வால் குழைத்து ஒடுங்கத்
தோன்றும் உன் மந்தகாசத்தில்
உருகி ஓடுகின்றன என் கவசங்கள்!

நான் நீட்டி வைத்திருந்த
என் பதாகைகளை
வாரிச் சுருட்டுகிறேன்!

அமல்!

நான் ஏதிலி!
வாளென்று
நான் இதுவரைச் சேர்த்தவை
வெறும் அட்டைக் கத்திகள்!

என்னுள்
பலுகிப் பூரித்துக் கிடந்த
ஆண்மைத் தம்பட்டங்கள்
பேடுகளின்
போலியுரைகள்!

இது நான் தவமின்றிப் பெற்ற ஞானோதயம்!

அளித்த நீ இனிச் சொல்!
உன் படையணிச் சிப்பாயின்
காலணி துடைக்கிறேன்!

பாலையில்
கதிர் – மணல் உமிழும்
கானல் தடங்களூடான
உன் நெடும் பயணங்களுள்
நீர் சுமப்போனாய் இருக்கவும்
எனக்குச் சம்மதம்!

“ நான் எங்கிருந்து தொடங்கட்டும் ? “ 

கேட்டவுடன்,
சுழித்துக் கிளம்பும் உன் சிரிப்பில்
கசிந்த என் கண்ணீர் துடைத்து
வாரிச்சேர்த்தாய் அக்கணமே!
எனக்கு நினைவிருக்கிறது....,!
அக்கணம் தான்
வீழ்ந்தது,
“ பஞ்சில் கனலின் பொறி “

8 கருத்துகள்:

 1. அருமை..
  படிக்கும் பலருக்கும் விழுந்திருக்கும் ஒரு கனலின் பொறி ...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தோழர்!
  வெந்து தணிந்தது காடு!
  வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஐயா!

  ’பஞ்சில் கனலின் பொறி`
  தகித்தது நன்றாய்!..

  வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி,
   எனக்கு வழிகாட்டிவிட்டுக் காணாமல் போனவன் குறித்த பதிவு இது.
   பாரதி சொல்வதுபோல்,
   “நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
   பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
   எங்கிருந்தோ வந்தான்“
   எங்கெங்கோ அலைந்து திமிர்பிடித்தலைந்த என் வாசிப்பின் பிரமாண்டம் நொறுக்கி இலக்கைக் காட்டியவன் அவன்!
   கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!

   நீக்கு
 4. omg !!!!!
  இப்போ நானும் ஏதிலியாய்
  இங்கு வந்த போது கொண்டு வந்த
  என் வார்த்தைகளை காணவில்லை!
  கசிகின்ற கண்களுக்கு
  அவை இணையும் இல்லை!!
  அண்ணா இந்த அற்புத நொடியை தந்தமைக்கு பரிசாய் வைத்துக்கொள்ளுங்கள் கைதட்டலை விட உயர்ததெனவே நான் நினைக்கும் இந்த கண்ணீர் துளிகளை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி,
   மிகமிகத் தாமதமான பதிலினுக்கு மன்னிக்க......
   என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.
   புதுக்கவிதையில் தேறிவிட்டேனா...???
   அல்லது மனம் மாறுபடக் கூறினால் மனம் புண்படுமென்னும் நாகரிகம் கருதிக் கூறிப்போகிறீர்களா...?
   மகிழ்ந்து நிறைகிறது மனம்!
   திருத்தங்கள் எதுவுமிருப்பின் தயங்காமல் கூற வேண்டுகிறேன்.
   நன்றி!

   நீக்கு
 5. துவக்கம் தொடர்ந்த விதம்
  முடித்தப் பாங்கு அருமை
  தொடர நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. பஞ்சில் கனலின் பொறி, பற்றி பரவும் எங்கும். நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் சுவடுகள் தடங்களாகட்டும்.