ஞாயிறு, 7 மே, 2017

ஆண்மையில்லாதவன் - பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் 1.3
இந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட,ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3 என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், அதற்கான விளக்கமும் உரையின் சில நுட்பங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

மரபுரைகளோடு பரிச்சயமும் பழந்தமிழ் இலக்கியங்களில் நுட்பமான பார்வையும், ஆழ்நோக்கும் வேண்டுபவர்களுக்கான பதிவிது.

“ கடாஅக் களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை
விடாஅதுநீ கொள்குவை யாகிற் படாஅகை
யீன்றன வாயமக டோள்.”

நச்சர் உரை = தோழி, தலைவனிடத்தே சென்று ஆண்டுச் செய்த நிமித்தத்தை ஆராய்ந்து பார்க்கில் மதத்தையுடைய களிற்றுனுங் காட்டிற் றறுகண்மையையுடைய ஏற்றை நீ கைநெகிழ விடாது கொள்வை. இப்பொழுது இவ்வாயமகள் தோள் ஏனை மகளிர் தோள்களிற் காட்டில் வெற்றிக்கொடியை உண்டாக்கினவாமென்றாள்.

உரைவிளக்கம்= தோழி தலைவனிடம் சென்று அங்கே ஆயர்கள் செய்த நல்ல நிமித்தத்தை ஆராய்ந்து பார்த்தால், மதம் பிடித்த யானையைவிட வீரமுடைய காளையை நீ கை நெகிழவிடாமல் பிடித்துவிடுவாய் என்று தெரிகிறது. எனவே, இப்பொழுதே உன் காதலியான இந்த ஆயமகளின் தோள் மற்ற பெண்களின் தோள்களில் காணப்படாத வெற்றிக் கொடியை அணியும் பெருமையைப் பெற்றுவிட்டது.

 “ பகலிடக் கண்ணியன் பைதற் குழலன்
சுவன்மிசைக் கோலசைத்த கையன் அயலது
கொல்லேறு சாட இருந்தார்க்கெம் பல்லிருங்
கூந்தல் அணைகொடுப்பேம் யாம்

நச்சர் உரை = எம்முடைய பலவான கரிய கூந்தலினையுடையவளை யாம் கூடுதற்குக்கொடுப்பேம்; கொல்லேற்றைச் சாடு தற்குச்சமைந்திருந்தவர்களுக்கென்று நமர்கூறி, கூற்றும் தலைவனையொழிந்த பகற்பொழுதிலே அலர்ந்த கண்ணியையுடையவன் வருத்தத்தையுடைத்தாகிய குழலினையுடையவன் சுவலின்மேலே கோலைவைத்த கையையுடையவனாகிய வினைவலபாங்கினோர்க்கு அயலதாயிருக்குங்காணென்றாள்.

அயலதென்றது ஏறு தழுவுதற்குஅரிதென்னும் பொருட்டு. இம்மூன்று பெயரும் ஏறுதழுவினவர்களை நோக்கிக் கூறிற்று.,

( இங்குள்ள நான்கு அடிகளில் கடைசி இரண்டு அடிகளை முன்னதாகவும், முதல் இரண்டு அடிகளைப் பின்னதாகவும் வைத்து நச்சினார்க்கினியர் பொருள் கொள்கிறார். )

உரைவிளக்கம்= எங்கள் காளையை அடக்குகின்றவனுக்கு அடர்ந்த கரிய கூந்தலை உடையவளைக் கொடுப்போம் என்று நம்மவர்கள் கூறினர். அவ்வாறு அவர்கள் கூறியது, தலைவனைத் தவிர, பகல் பொழுதில் அலர்ந்த மாலையைச் சூடியவனுக்கும், வருந்தும் வண்ணம் சோகமாகத் தன் குழலிலே இசையை மீட்டிக் கொண்டிருப்பவனுக்கும், தனது தோள்களில் பொருந்திய கழியின் மேல் கையை வைத்திருப்பவனுக்கும் பொருந்தாது. ஏனெனில் இவர்கள் வினைவலபாங்கினர்.

(பாடலில்) அயலது என்று குறிப்பிடுவது ஏறு தழுவுதல் கடினமே என்பதன் காரணமாக. இந்த மூன்று பெயரும் ஏறு தழுவினவர்களை நோக்கிக் கூறியது.

( இந்நான்கு வரிகளுக்கான நச்சினார்க்கினியரின் உரைப்பகுதி, என்னை மிகக் குழப்பியது. இதனை ஊமைக்கனவுகள் தளத்திலும் குறித்திருந்தேன். இப்போது,  ‘இம்மூவரும் தலைவியின் காளையைத் தழுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அதை நோக்கிய தோழி, தலைவியை ஆற்றுப்படுத்தும் விதமாக, அவர்கள் ஏறு தழுவக் களத்தில் இறங்கினாலும் அம்முயற்சியில் வெல்லப்போவது உன் மனதிற்குப் பிடித்த தலைவனே! அவரைத் தவிர நம் ஏற்றினைத் தழுவுதல் என்பது இவர்களுக்கெல்லாம் அயலது (அரியது) என நச்சினார்க்கினியரின் உரைப்பொருள் அமைந்துள்ளதோ எனத் தோன்றுகிறது.)

“கோளாளர் என்னொப்பார் இல்லென நம்மானுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கொருநாள்
கேளாளன் ஆகாமை இல்லை அவர்கண்டு
வேளாண்மை செய்தன கண்

நச்சர் உரை = யான் முற்கூறிய நிமித்தமேயன்றித் தலைவனைக் கண்டு, கண்கள் உபகாரத்தைச் செய்கையினாலே ஏறுகொள்ளவல்லார் என்னையொப்பார்  பிறரில்லையென்று நம்முடைய பசுத்திரளிலே நின்று தனது தாளாண்மையைக் கூறுந்தலைவன் பின்பு ஒருநாளிலேயாயினும் ஏறுதழுவி நம்மைத் தனக்குக் கேளாக ஆளுந்தன்மையை உடையனாகாமை இல்லை யென்றாள்.

உரைவிளக்கம்= நான் முன்பு கூறிய (நல்ல) நிமித்தமும் அன்றி, தலைவனைக் கண்ட போது, என் கண்கள் நல்ல செயலைச் செய்வதனாலே ( இடது கண் துடித்தல் ), இந்த ஏற்றினைத் தழுவக்கூடியவர்கள், என்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்று நம்முடைய பசுக்கூட்டத்திலே நின்று தன்னுடைய முயற்சியின் வலிமையைப் பற்றிச் சொல்லும் தலைவன், ( இன்றில்லாவிட்டாலும் ) பின்பு ஒருநாள் வந்து  நம்முடைய ஏற்றினைத் தழுவி உன்னைத் தனக்குச் சொந்தமாக ஆக்கிக்  கொள்ளாமல் இருக்க மாட்டான்.

“ஆங்கு,
ஏறும் வருந்தின ஆயரும் புண்கூர்ந்தார்
நாறிருங் கூந்தற் பொதுமகளிர் எல்லோரும்
முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ(டு)
எல்லாம் புணர்குறிக் கொண்டு

நச்சர் உரை = அவ்விடத்து ஏறுகளும் வருந்தின. இடையரும் புண்மிக்காரென்று எல்லாம் ( விலக்குகையினாலே ) தம்மைக் கொள்ளுதற்கு நின்ற பொதுவரோடே தாம் புணர்தற்கு வேண்டும் நிமித்தங்களைப் பெற்று நாறுகின்ற கரிய கூந்தலையுடைய பொதுமகளிரெல்லாரும் முல்லையையுடைய குளிர்ந்த பொழிலிடத்தே விளையாடுதற்குப் புக்கார்.

நாமும் பொழிலிடத்தே விளையாடுவதற்குப் போதுவாயாகவென்றாள்.

உரைவிளக்கம்= அந்த இடத்தில் ஏறுகளும் துன்பமுற்றன. இடையரும் காயம் பட்டார். ( ஏறுதழுவி வெற்றி பெற இயலாமல் காயம் பட்டு விரும்பிய பெண்ணை அடைய முடியாமல், ) பொதுமகளிரை அடைவதற்காக நின்ற பொதுவர்களிடம், மணம் கமழும் கரிய கூந்தலை உடைய பொதுமகளிர், தாங்கள் அவர்களுடன் இணைவதற்குரிய அடையாளங்களை அறிந்து கொண்டு ( அவர்களுடன் ) குளிர்ந்த முல்லைப்பொழிலில் விளையாடப் புகுந்தனர்.

நாமும் அப்பொழிலுக்கு விளையாடப் போவோம் வா! ( எனத் தோழி தலைவியை அழைத்தாள் )

நயம்.

வேளாண்மை செய்தன கண்

கலித்தொகையின் இந்த அடியைக் கவனியுங்கள்.

தமிழ்ப் பயிற்சிகளில் ஒருமை பன்மை திருத்தி எழுதுமாறு ஒரு பயிற்சி அளிக்கப்படும்.

அப்பயிற்சி பெறும் மாணவனிடம் இந்தக் கலித்தொகை வரியைக் கொடுத்தால், இது தவறு,

வேளாண்மை செய்தது கண்

என்று இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுவான். ஆம். அதுதான் சரியும் கூட.

அல்லது வேளாண்மை செய்தன கண்கள் என்றாவது இருக்க வேண்டும்.

மூலபாடத்தில், வேளாண்மை செய்தது கண் என்றுதான் இருக்கிறது. அதில் கைவைக்க முடியாது. ஆனால் மாணவனுக்குச் சமாதானம் சொல்லியாக வேண்டும்.

நச்சினார்க்கினியர் சொல்கிறார்,

கண் வேளாண்மை செய்தல் என்பது இடது கண் துடித்தல். அதே நேரம் வலது கண் துடித்தால் அது நன்னிமித்தம் அல்ல.

இப்போது,

இடது கண் துடித்த அதே நேரம் வலது கண் துடிக்காமல் இருந்தலும் ஆகிய இரு நிமித்தங்களைக் கண் செய்தன என்பதற்காகவே, “ செய்தன கண்”  என பன்மையால் கூறினார் புலவர்  என மாணவரைச் சமாதானப்படுத்தி, புலவரையும் காப்பாற்றி விடுகிறார் நச்சினார்க்கினியர்.

விளக்கங்கள்.

வினைவல பாங்கினர் – இப்பாடலில், பகலிடக்கண்ணியன், பைதற்குழலன், சுவல்மிசை கோலசைத்த கையன் என்னும் மூவரை வினைவலபாங்கர் என நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில்,

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத் தென்மனார் புலவர். ( தொல்.பொருள்.23)

என்னும் சூத்திரத்திற்கான உரையில்,

வினைவல பாங்கர் என்பவர்கள் பிறர் ஏவிய தொழிலைச் செய்யும் ஆண்களும் பெண்களும் என்றும் இவர்கள் குறிஞ்சி, முல்லை, முதலிய அன்பின் ஐந்திணைக்குத் தலைமக்களாக ஆகமாட்டார்கள் என்றும் அவர்கள் கைக்கிளை பெருந்திணைக்கே உரியவர்கள் என்றும் நச்சினார்க்கினியர் கூறுவார்.

ஏன் வினைவல பாங்கினர் அகத்திணைக்கு உரிய தலைவன் தலைவியாக ஆக மாட்டார்கள் என்பதற்கான காரணத்தை இதே சூத்திரத்தின் உரைக்கு இளம்பூரணர்,

‘அகத்திணை என்பது,  அறம் பொருள் இன்பம் இவற்றிற்கென வகுத்த நெறிகளில் தவறாமல் இருத்தல். அப்படி இருப்பது என்பது பிறர் ஏவியதைச் செய்து பிழைக்கும் மக்களுக்குக் கடினமான ஒன்று. அதுமட்டுமன்றி, அவர்கள், பழி பாவங்களுக்கு வெட்கும் தன்மையில் குறைபாடுடையவர்களாதலினாலும், குறிப்பு உணராமல், தாம் விரும்பிய எதனையும் அடையக் கருதுவார் ஆதலினாலும், இன்பமான இனிய வாழ்வு வாழ்பவர்கள் பிறர் இட்ட பணிகளைச் செய்து ஏவலராய் வாழ மாட்டார்கள் ஆதலினாலும், இவர்கள் அகனைந்திணைக்கு உரிமையில்லாதவர் ஆயினர்’ என விளக்கமளிப்பார்.

( “இவர் அகத்திணைக்கு உரியரல்லரோ எனின், அகத்திணையாவது அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இருத்தல் வேண்டும்.அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடுடையராகலானும் குறிப்பறியாது வேட்கைவழியே சாரக்கருதுவாராகலானும் இன்பம் இனிது நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதானும் இவர் புறப்பொருட்குறியராயினார். ” தொல்.பொருள்.23. இளம். உரை )

அதே நேரம், சிறப்பில்லாத திணைகளான கைக்கிளை பெருந்திணை எனும் இத்திணைகளில் இவர்கள் தலைவனாகவோ தலைவியாகவோ வரமுடியும்  என்பதைக் கலித்தொகையின் 108, 112, 113 ஆகிய பாடல்களின் வாயிலாக நச்சினார்க்கினியர் காட்டுவார்.

ஆசுரமாகிய கைக்கிளை.

இந்தப் பாடலை, சிறப்பில்லா ஆசுரமாகிய கைக்கிளை என நச்சினார்க்கினியர் வகைப்படுத்துகிறார்.

கைக்கிளை என்பது ஒருதலைக்காதல். அது சிறப்புடையதன்று. ஏனெனில் இருமனம் கலத்தல் அதில் இல்லை.

ஆசுரம் என்பது பெண்ணின் சுற்றத்தார்க்கு அவர் வேண்டுவன கொடுத்துப் பெண்ணை  மணம் புரிந்து கொள்ளும் மணமுறை.

இங்கு, அந்த ஆடவனைப் பெண்ணிற்குப் பிடிக்கிறதா இல்லையா என்ற கேள்வி இல்லை.

அவனுக்குப் பிடித்திருந்தால், அவளது சுற்றத்தார் வேண்டுவதுபோல், காளையைத் தழுவித் திருமணம் செய்து கொள்ள முடியும். அவளுக்குப் பிடித்தவனாய் இருந்தாலும் ஏறுதழுவ இயலாவிடின் அவளால் திருமணம் செய்து கொள்ள முடியாது.

எனவே இதனைச் சிறப்பில்லா, ஆசுரமாகிய கைக்கிளை என நச்சினார்க்கினியர் வகைப்படுத்தினார்.தொடர்வோம்.

படஉதவி - நன்றி கூகுள்

1 கருத்து:

 1. முரணுக்கு மிகவும் கஷ்டப்பட்டு, பொருத்தமான விடை தேடிவிட்டீர்கள். பாராட்டுகள்.
  காளையை அடக்குவது இம்மூவருக்கும் அரிதான விஷயம்; உன் மனதுக்குப் பிடித்தவனே காளையை அடக்குவான் என்று தோழி தலைவியை ஆற்றுப்படுத்தும் விதமாகக் கூறியிருக்கலாம் என்ற உங்கள் யூகம், மிகப் பொருத்தமே.
  உங்கள் உரை இல்லாவிட்டால், நச்சினாக்கினியரின் உரையைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமந்தான்.
  வேளாண்மை செய்தன கண் என்பதற்கு நச்சினார்க்கினியரின் உரையைப் படித்து மிகவும் ரசித்தேன். மிகவும் நுட்பமான விஷயத்தை எடுத்துக்காட்டியமைக்கு மிகவும் நன்றி. நீங்கள் சொல்லும்வரை வேளாண்மை செய்தன கண் என்று பன்மையில் வந்திருப்பதை நான் கவனிக்கவே இல்லை. உங்கள் நுண்ணிய பார்வை கண்டு வியக்கிறேன்.
  கைக்கிளை பற்றியறிந்து கொண்டேன். இப்பாடலில், அம்மூவரும் காளையை அடக்குவது அரிது; உன் மனங்கவர்ந்த தலைவன் என்றாவது ஒரு நாள் காளையை அடக்கி உன்னை மணம் செய்து கொள்வான் என்று தானே தோழி ஆறுதல் கூறுகின்றாள். பிறகு இதையேன் கைக்கிளை என்று ஏன் வகைப்படுத்துகிறார் நச்சினார்க்கினியர்?
  ஏறுதழுவலில் தலைவன் ஈடுபட்டு வெற்றி வாகை சூடும் செய்தி இப்பாடலில் இல்லாததன் காரணமா? அல்லது தலைவிக்குப் பிடிக்காத வினைவல பாங்கினர், ஏறு தழுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதாலா?
  வினைவல பாங்கினர் என்பதற்குத் தொல்காப்பியத்திலிருந்தும் பொருள் கொடுத்தமைக்கு நன்றி.
  நச்சினார்க்கினியரின் உரைக்கு எனக்குப் புரியும் வகையில் உரை எழுதி, நுட்பங்களையும் எடுத்துக்காட்டி ரசிக்க வைத்தமைக்கு மிகவும் நன்றி சகோ.
  உங்கள் தமிழ்ப்பணி என்றென்றும் தொடர வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் சுவடுகள் தடங்களாகட்டும்.