செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெடிப்பு றுங்கவிச் சூரியன்.


கால முண்ட கண்மணிப் பூக்களின்
கண்ட கனவுகள் கருகிய பேழையுள்
ஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்
ஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்!


கள்ளிப் பாலிலும் நெல்மணி யூட்டியும்
கரைந்த பெண்சிசு கண்ணீர் பெருகிட
முள்ளாய் முகிழ்த்த ஆண்மரத் தோப்பினை
மூட்டி யழித்துதீ முகிழ்த்திடக் காண்கிறேன்!

வேட்டை யாடும் விலங்குக ளாகியே
வெற்றுச் சதையெனப் பெண்மை நினைந்தவர்
ஓட்ட மெடுத்திட ஓங்கு மறிவினில்
ஒளிநு தலினள் வளருதல்   காண்கிறேன்!

அச்சத் தளைகளில் அடிமைக ளாக்கியே
ஆயி ரம்பல வாயிர மாண்டுகள்
துச்ச மென்றே தூற்றியோர் சிந்தனை
தூக்கி லேற்றுவோர் துடித்தெழக் காண்கிறேன்!

அடுப்புக் கரிமுகம் ஆணினச் சாட்டையில்
அடிப டத்துடித் தடங்கிய பெண்மையுள்
வெடிப்பு    றுங்கவிச் சூரியன் தோன்றியே
விடியல் காட்டவோர் விழிசெயக் காண்கிறேன்!

உள்ளக் கல்லறை உலரவோர் மூலையை
உலக மென்று காட்டுவார் ஊமையாய்த்
தள்ளி வைத்துநீ தகவிலாள் என்றதைத்
தகர்த்தெ ழுந்துபெண் முகிழ்த்திடக் காண்கிறேன்!

வீட்டு வேலையில் வெந்து கருகுதல்
விதியெ னத்தமை விற்ற வாழ்க்கையை
ஓட்டுங் கல்வியால் ஓங்கு வாளெனெ
ஒளிந்த பெண்ணினம் ஒளிருதல் காண்கிறேன்!


( எண்ணற்ற பெண்களின் அறிவுச்சுடரை அணைத்துத்தான் இந்த உலகம் ஆண்களின் உலகாக மாற்றப்பட்டது. அப்படி இதுவரை அணைந்த எத்தனையோ கவிதைகள்... சிந்தனைகள்.... காவியங்கள்....!
இன்னொரு புறம் சீரறிவுத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்தும் வண்ணம்  இணைய வானில் ஒளிபாய்ச்சும் சகோதரிகள் மைதிலி, கிரேஸ் இளையநிலா இளமதியார், இனியா... இன்னும் அறிவில் ஓங்கித் தழைக்கும் பெயர் தெரியா எண்ணற்ற சகோதரிகள் அனைவர்க்கும் இது என் சமர்ப்பணம் )

படஉதவி - கூகுள்

20 கருத்துகள்:

 1. அன்பு நண்பருக்கு,

  வெடிப்புறுங் கவிச்சூரியனை
  துடிப்புடன் போற்றிப் பாடியே
  படிப்புறும் பெண்மையைப் போற்றியே
  நடிப்புறும் ஆண்மையைப் தூற்றியே
  விடிப்புறும் நாளை தாய்மை களிப்புறும் !

  அருமையான கவிதை. வாழ்த்துகள்.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளிக் கவிதையில் துள்ளிவரும் பதில்..
   நன்றி மணவையாரே!

   நீக்கு
 2. வணக்கம் ஐயா!

  பெண்களின் பேரறிவு போற்றும் பெருந்தகையுன்
  தன்மையைக் கண்டேன் தலைவணங்கி! - உண்மையை
  ஓங்கி உரைத்தீர் நனிநன்றி! தீமையினைத்
  தேங்காமற் தீர்ப்பார் திரண்டு!

  உங்கள் கவிகண்டு உள்ளம் உவகையுற்றேன்!
  பெண்களின் வளர்ச்சியைப் பெரிய மனதுடன் பாராட்டியுள்ளீர்கள்!
  பெரும் பேறு பெற்றவர்கள்தான் நாம்! பெருமைகொள்கின்றேன்!
  உளமார்ந்த நன்றி ஐயா!

  சீரறிவுத் திறம் வியந்து பாராட்டுபவர்கள் வரிசையில்
  இளையநிலா - இளமதியுமா?..

  ஐயா!.. எனக்கே என்னைத் தெரியவில்லை இன்னும்!
  என்ன செய்கிறேன்?.. என் சிந்தனை சரியானதா?
  யாரையும் புண்படுத்துகிறதா? எனக் குழம்பிக் கிடக்கின்றேன்!
  இவர்களுடன் என்னை ஒப்பிடுவதா ஐயா!
  போகவேண்டிய பயணம், தூரம் இன்னும் இருக்கிறது எனக்கு!..
  ஏணியை அண்ணாந்து பார்க்கும் நிலையில்தான் இன்னும் நான்!..
  ஏறவே தொடங்கவில்லை!....

  என்றன் மேலும் உங்களின் உணர்வு பூர்வமான மதிப்பினை என்னவெனச் சொல்ல…! என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா!
  உங்களுக்கும் அனைத்துச் சகோதரிகளுக்கும்
  உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி,
   உங்களையெல்லாம் பார்க்க உங்களைப் போல் வெளிப்பட முடியாமல் வரலாற்றில் அழிந்து போன ( அழிக்கப்பட்ட?) பல கோடி அறிவுப் பெண்களின் அழுகுரல் நினைந்தே எழுதப்பட்டது இது.
   நானறிந்து என் முப்பாட்டியும் அவருள் ஒருவள்.
   நன்றி

   நீக்கு
 3. அண்ணா!
  இது உண்மையில் எனக்கு என் தோழிகளோடு பங்கிட்டுக்கொள்ள கிடைத்த புதையல்:)) இன்றைய நாளை இனிமையாய் முடிக்க இதைவிட வேறென்ன வேண்டும்::)) மிக்க நன்றி அண்ணா! மீண்டும் ஒரு(பல) முறை இதை படிக்கவருவேன்:)

  பதிலளிநீக்கு
 4. இப்போது இந்த பாட்டு புரிகிறது.
  நேரம் கிடைக்கும்போது, மறுபடியும் இந்த பாட்டை படித்து, நான் புரிந்து கொண்டதை தங்களுடைய தனிப்பட்ட முகவரியில் அனுப்புகிறேன். நான் புரிந்து கொண்டது சரிதானா என்று சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்தறியக் காத்திருக்கிறேன் அய்யா!
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

   நீக்கு
 5. உண்மைதான் ஆசானே! பெண்களின் அறிவு மறைக்கப்பட்டு ஆண்களின் உலகமானது.....மேற்கத்திய நாடுகளில் கூட ஒரு காலத்தில் பெண்கள் ஆண்களின் பெயரில் படைத்திருக்கின்றனர்...கவிதைகள் எல்லாம்...தங்களுக்குத் தெரியாதா என்ன....அப்படிப் பார்க்கும் போது நம் சங்க இலக்கிய காலத்தில் பெண்கள் மிகவும் தைரியமாகப் படைத்தனரோ! உலகம் அறியும் வகையில்! ஏன் இந்திய சுதந்திர வரலாற்றில் கூட பல பெண்களின் படைப்புகள் பேசப்படுகின்றனவே இல்லயா ஆசானே! வலை உலகில் நம் சகோதரிகள் கலக்கத்தான் செய்கின்றார்கள்!

  மிகவும் ரசித்துப் படித்தோம் கவிதையை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசானே,
   நீங்கள் காட்டும பழந்தமிழ் இலக்கியத்திலேயே பெண்பெயரில் எழுதிய ஆண்களும் உண்டு.
   நிச்சயம் வியக்கின்ற பெண் ஆளுமைகள்தான் அவர்கள்!
   நன்றி

   நீக்கு
 6. வீட்டு வேலையில் வெந்து கருகுதல்
  விதியெ னத்தமை விற்ற வாழ்க்கை----அடுப்பாங்கரையில் இருந்து வெளியே வந்தால் மாறும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் கரை ஏறுவதற்கே இரண்டாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது இல்லையா வலிப்போக்கரே!

   நீக்கு
 7. அடடா இதை எப்படி தவறவிட்டேன். எப்படி நன்றியை தெரிவிப்பது என் நாவும் எழவில்லை ல்தம்பிக்கும் படியாய் என்னையும் அந்த வரிசையில் ஏற்றி என் கண்கள் கரையும் படியாய் வார்த்தைகள் வரவே மறுக்கிறது சகோ நன்றி நன்றி என்று பல நூறு தடவை சொன்னலும் போதாதே.
  என் உயிர் உள்ளவரை நன்றியுடன் இருப்பேன்.
  கவிதை பற்றி மீண்டும் மீண்டும் வாசித்து விட்டு கருத்திடுகிறேன் ok வா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யோ என்ன சகோதரி இது பெரிய பெரிய வார்த்தையெல்லாம்..??!!
   எப்பொழுதும் போல இருங்கள்!

   நீக்கு
 8. பெண்களைப் பேயெனவும் புத்தியற்றோர் என்றெண்ணி
  பின்முத்திரை குத்தியே மூலையில் இட்டவர்
  வன்மம் வளர்த்திட்டே வாய்வீச்சில் வென்றவரை
  சிந்திக்க வைத்தீர் சிறந்து!

  மிகவும் வேண்டிய கவிதை மிக அருமை சகோ !

  பதிலளிநீக்கு
 9. பெண்மை வாழ்கவென்றுக் கூத்திடுவோமடா - என்ற பாரதியின் வரியை நினைவுப் படுத்தும் வலிமையான கவிதை.என் "சிலம்பின் புலம்பல்" http://sivakumarankavithaikal.blogspot.com/2010/11/blog-post_19.htmlபடித்துப் பாருங்கள். நேரம் கிடைக்கும் போது

  பதிலளிநீக்கு
 10. பெண்மையைக் குறித்த தங்கள் கவி அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் சுவடுகள் தடங்களாகட்டும்.