திங்கள், 11 ஜனவரி, 2016

உயிர்கள் உதிரும் களம்;பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் -1. 2. 1.


இந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட, “உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக்காட்சிகள் – 1. 2”. என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், அதற்கான விளக்கமும் மொழியின் சில நுட்பங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன. மரபுரைகளோடு பரிச்சயமும் பழந்தமிழ் இலக்கியங்களில் நுட்பமான பார்வையும் வேண்டுபவர்களுக்கான பதிவிது. எனவே பொது வாசிப்பிற்கு உகந்ததாய் இராது.

நாம் உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1. 2 எனும் பதிவில் கண்ட பாடலின் அதே பகுதி அப்பதிவினைப்போன்றே இங்கும்  நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியைத் தொடர்ந்தும் பாடலின் வரிகள் தனித்தனியே எடுத்துக்காட்டப்பட்டு, அதற்கான நச்சினார்க்கினியரின் உரையும், அதனைத்தொடர்ந்து தற்காலத்தமிழில் அதனோடொத்த உரையும் எழுதப்பட்டுள்ளது.

கூடுதலாக விளக்கம் தேவைப்படும்  இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பதிவின் முடிவில் பாடலிலும் உரையிலும்  கண்ட நயங்களும் சில சொற்களுக்கான விளக்கமும் கொடுக்கப்படுகின்றன.

இனிப் பாடல்,

பகுதி - 1

“மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்

நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,

கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்

அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்

நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் ”

இதற்கு நச்சினார்க்கினியர் உரையும் அதன் உரையும்

மேற்பாட்டு உலண்டின் நிறனொக்கும் – உயர்ந்த கொம்பிடத்தே வைத்த  உலண்டினது நிறத்தை யொக்கும்

= உயரமான மரக்கிளைகளில் இருக்கின்ற உலண்டினது நிறத்தைப் போன்ற

புன் குருக்கண் நோக்கு அஞ்சான்  - புல்லிய நிறத்தைத் தன்னிடத்தேயுடைய எருத்தினது நோக்கை அஞ்சானாய்

= வெளிறிய நிறத்தைத் தன்னிடம் கொண்ட எருதின் பார்வையைக் கண்டு அஞ்சாமல்

பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி - அதின்மேலே பாய்ந்த இடையனைச் சாவக்குத்திக்

அதன்மேல் பாய்ந்த இடையனை அவன் உயிர் போகுமாறு குத்தி

கோட்டிடைக் கொண்டு  குலைப்பதன் தோற்றம் காண் - கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக் குலைக்கின்றதனுடைய தோற்றரவைக் காணாய்!

= தன் கொம்புகளில் அவனது உடலைக் குத்தி எடுத்து அதனைக் குலைக்கின்றதன் தோற்றத்தைப் பார்.

தோற்றரவு – தோற்றம் என்ற பொருளைக் குறிக்க நச்சினார்க்கினியர் கையாளும் சொல் இது. )

அம் சீர் அசைஇயல் கூந்தல் - தலைமையினையுடைய மனமசைந்த இயல்பினையுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே

= மேன்மையை உடைய மனம் கலங்கிய ( அசைந்த ) இயல்பினை உடைய துரோபதியின் மெல்லிய ( துய்ய ) கூந்தலை

கை நீட்டியான் நெஞ்சம் பிளந்து  இட்டு -  கையை நீட்டிய துச்சாதனனுடையநெஞ்சைப் பிளந்து போகட்டு

= ( பற்றத் ) தன் கையை நீட்டிய துச்சாதனனுடைய நெஞ்சம் பிளந்து  போகும்படி

நேரார் நடுவண், தன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் – பகைவர் நடுவே தான்சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச்செய்த வீமசேனனைப்போலும்.

= பகைவர் நடுவில் தனது வஞ்சினத்தை நிறைவேற்றிய பீமனைப் போல இருக்கிறது.

பகுதி - 2

“சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி

விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,

குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்

படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்

இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு,

குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்!”


இதற்கு நச்சினார்க்கினியர் உரையும் அதன் உரையும்


சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி – மதி விரிந்தாற் போன்ற சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது

 = நிலவின் பிறை போன்று விரிந்த  சுழியை நெற்றியில் உடைய கரிய எருது.

விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி - முழைஞ்சினையுடைய மலையிற் பூவாற்செய்த  அழகையுடைய கண்ணியையுடைய பொதுவனைத் துகைத்து

= குகையை உடைய மலையில் பூக்கின்ற பூவினைக் கொண்டு செய்த அழகையுடைய கண்ணியை அணிந்திருக்கும் பொதுவனைக் குத்திச் சாய்த்து

குடர் சொரியக் குத்தி – குடர் சரியும்படி குத்தி

= குடல் சரியுமாறு குத்தி

குலைப்பதன் தோற்றம் காண் - கோட்டிடைக் கொண்டு குலைப்பதனுடைய தோற்றரவைக் காணாய்!

= தன் கொம்பிடையே கொண்டு சிதைப்பதன் தோற்றத்தைப் பார்!

படர் அணி அந்தி - பல்லுயிரும் வருத்தத்தை அணிகின்ற ஊழிமுடிவிலே

= பல உயிர்களும் வருந்துகின்ற உலக முடிவில்.

 பசுங் கட் கடவுள் - பசியநிறத்தைத் தன்பாகத்தேயுடைய உருத்திரன்

= பச்சை நிறத்தைத் தன் ஒரு பாகமாய் உடைய உருத்திரன்.

( பச்சை நிறம் இங்கு உருத்திரனின் ஒரு பாகமாக இருக்கின்ற உமையைக் குறித்தது )

 இடரிய ஏற்று எருமை -  வருத்தத்தைச் செய்த ஏறாகிய எருமையை ஏறுகின்ற  கூற்றுவனுடைய

= உயிர்களுக்கு வருத்தத்தைச் செய்யும் எருமையை வாகனமாகக் கொண்ட எமனுடைய

நெஞ்சு இடந்து இட்டு - நெஞ்சைப் பிளந்து போகட்டு

= மார்பு பிளந்து போகும்படிச் செய்து

குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் - அவன் குடரைக் கூளிக்கிட்டு அவற்றின் வயிற்றை நிறைவிக்கின்றவனைப்போலும்

= அவனுடைய குடலைக் கூளிக்கு அளித்து அவற்றின் வயிற்றுப்பசியை ஆற்றுகின்றவனைப் போல இருக்கிறது.

பகுதி - 3

“செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்

கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,

நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்

ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன்

தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்

தோளின் திருகுவான் போன்ம்”


இதற்கு நச்சினார்க்கினியர் உரையும் அதன் உரையும்

செவி மறை  மின்னும் நுண் பொறி நேர் வெள்ளை - செவிமறுவாயிருக்கின்ற விளங்கும் நுண்ணிய சிவந்த பொறிகளை யுடைய ஆயர் நேர்ந்துவிட்ட வெள்ளை யெருத்தினது

= காதுகளில் மச்சம் போன்று தோன்றும் சிறிய சிவந்த பொறிகளை உடைய, ஆயர்களால் நேர்ந்துவிடப்பட்ட வெள்ளைக் காளையினுடைய

கதன் அஞ்சான் - கோபத்தை அஞ்சானாய்

= கோபத்தைக் கண்டு அஞ்சாதவனாய்

பாய்ந்த பொதுவனை  நுதி சாடி - அதன்மேலே பாய்ந்த பொதுவனை நுதியைத் துகைத்து

= அதன்மேலே பாய்ந்த பொதுவனுடைய தலையை முட்டி

நுனைக் கோட்டால் -  முனையினையுடைய கோட்டாலெடுத்து

= கூர்மையான தன் கொம்பினால் தூக்கி

குலைப்பதன் தோற்றம் காண் - குலைப்பதனுடைய தோற்றரவைக் காணாய்

= ( அவன் முகத்தைச் சீர் ) குலைப்பதன் தோற்றத்தைப் பார்!

அருங் கங்குல்  - வருதற்கரிய கங்குலிலே

 = வருவதற்குக் கடினமான இரவில்

 ஆர் இருள் என்னான்  வந்து - அரிய இருளென்று கருதானாய் வந்து

 =  அரிய இருளென்று எண்ணாமல் வந்து.

தந்தையைக் கொன்றானைத் தாளின் கடந்து அட்டு - துரோணாசாரியனைக் கொன்ற  சிகண்டியைத் தன்முயற்சியாலே வென்று கொன்று

துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியைத் தான் போரில் வென்று ( முயல் – போர் )

தோளின் திருகுவான் போன்ம் - தன் தோளால், தலையைத் திருகும் அச்சுவத்தாமாவைப் போலும்.

= தன் கைகளால் ( தோள் ) அவன் தலையைத்  திருகிக் கொன்ற அச்சுவத்தாமாவைப் போலும்.

பகுதி - 4

“எனவாங்கு;

அணிமாலைக் கேள்வற் றரூஉமா ராயர்

மணிமாலை யூதுங் குழல்”


இதற்கு நச்சினார்க்கினியர் உரையும் அதன் உரையும்

எனவாங்கு

( இங்கு, இச்சொல் கலிப்பாவின் அமைப்பில், தனிச்சொல் என்ற, ஓருறுப்பாக வந்துள்ளது. சில இடங்களில் இச்சொல்லுக்குப் பொருள் உண்டு. சில இடங்களில் இச்சொல் வெறுமே பொருளற்று நிற்கும். ஒரு பாடலில் இதுபோல யாப்பமைதிக்காக பொருளற்று நிற்கும் சொற்களை அசைநிலை என்று சொல்வார்கள். இப்பாடலில் எனவாங்கு என்னும் இச்சொல் அசை நிலை )

இந்த இடத்தில், நச்சினார்க்கினியர், பாடலில் காணப்பட்ட இடைவெளியைத் தம் கருத்தால் நிரப்புகிறார்.

அவர் கருத்தாவது,

(நச்) - இங்ஙனம் தோழி காட்டக்கண்டு நங்கணவற்கும் இங்ஙன மாகுமோ வென்று அஞ்சின தலைவியது அச்சத்தை ஆண்டுப்பெற்ற நன்னிமித்தங்கண்டு தோழி போக்குவாளாக மேற்கூறுகின்றாள்.

= ஏறு தழுவுவோர் இவ்வாறு  கொல்லப்படும் காட்சிகளைத் தோழி காட்டவே நம்முடைய கணவருக்கும் இப்படியாகுமோ என்று அச்சமடைந்த தலைவியின் அச்சத்தை , அங்கு நிகழ்ந்த நல்ல நிமித்தம் ஒன்றைக் காட்டிப் போக்குகின்றவளாகத் தோழி தொடர்கிறாள்.

( காதலனைக் கணவர் என்பது அவனையே தனது கணவனாக வரிந்து கொண்ட பெண்ணின் மனநிலை.)

ஆயர் ஊதுங் குழல் - ஆயர் ஈண்டு ஊதுகின்ற குழல்

= ஆயர்கள் ஊதும் குழலோசை

மணிமாலை  அணிமாலைக் கேள்வற்கு - நீலமணிபோலுங் காயாம்பூவாற் செய்த மாலையினை அணியும் இயல்பினையுடைய கேள்வனை

= நீலமணியைப் போல்தோன்றும் காயாம்பூவால் செய்யும் மாலையை அணிவதை இயல்பாகக் (மாலை) கொண்டிற்கும் நம் தலைவனை

தரூஉமார். - நமக்குத் தருதற்கு நன்னிமித்தமாக இசைத்தது காண்!நீ அஞ்சாதே கொள்ளென்றாள்அது, மங்கலமான பண்ணைத் தருதலின் நிமித்தமாயிற்று.

உனக்குத் தருகின்றதற்கு நல்ல அறிகுறியாக இசைத்தது. எனவே  நீ அஞ்சாமல் இரு  என்றாள். ஆயர் ஊதுகின்ற அந்தக் குழலிசையில் இருந்து இசைக்கப்படுவது மங்கலமான பண். எனவே அது (நல்ல) நிமித்தமானது.



இனிக் கொஞ்சம் ஆராய்ச்சி.


1) விடரி – என்பதற்கு நச்சினார்க்கினியர் குகை (முழைஞ்சு) என்று பொருள்காண்கிறார். ஆனால் முழைஞ்சு என்பது இங்குக் குகையைக் குறித்து வரவில்லை. எனவே விடரி என்பதை முழைஞ்சினை உடைய மலை என்று  பொருள்விரிக்கிறார்.

ஒருபொருளினது பெயர், அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்குப் பெயராகத் தொன்றுதொட்டு வருவதை ஆகுபெயர் என்கின்றன இலக்கணங்கள்.

இங்கே  குகை என்ற பொருள்படும் விடரி என்ற சொல் குகையைக் குறிக்காமல், அதனோடு தொடர்புடைய மலை என்பதைக் குறிப்பதால் அது ஆகுபெயர் ஆயிற்று.

ஆனால்,

 இந்தப் பாடலில் வரும் விடரி என்னும் சொல்  மலையையும் குறிக்கவில்லை.

அம்மலையில் மலர்ந்த மலரைக் குறிக்கிறது.

குகை என்ற சொல் முதலில் மலையைக் குறித்துப் ( ஆகுபெயர் ) பின்னர் அம்மலை என்ற சொல் அங்கு மலரும் பூக்களைக் குறித்து ( மீண்டும் ஆகுபெயராய் ) வந்தமையால் இதற்கு இருமடி ஆகுபெயர் என்று பெயர்.

2) இனி, “ விடரியங் கண்ணியன் ” 

என்பதில், உள்ள கண்ணிக்கு வருவோம்.

பூக்களை இருபுறமும் இணைத்து நடுவில் நாரினால் பிணைத்துக் கட்டும் மாலையே கண்ணி எனப்படும். நம் கண்களைப் போல மலர்களை இருபுறமும் இணைத்துக் கட்டியதால் கண்ணி எனப்பட்டது என்று இதற்குப் பெயர்க்காரணம் சொல்வார்கள். அது முக்கியமன்று.

தலையில் சூடும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். இதுவே இங்கே முக்கியம்.

மார்பில் அணியும் மாலைக்குத் தார் என்றுபெயர்.

 3 ) பகுதி 2 இல் உள்ள,

“படர் அணி அந்தி பசுங்கண் கடவுள்”

 எனச் சிவபெருமானைக் குறிக்கும் தொடரில் வரும்,

கண் என்பதை,

அந்திக்கண்

பசுங்கண் எனக் கண் என்பதை இரண்டிடத்தும் சேர்த்து,

(அந்தியின் நிறமான) சிவப்பும், பசுமை நிறமும் என இருநிறங்களையும் தன்னில் கொண்ட உமையொருபாகனுக்கு உதாரணமாய்க் கொள்ளலாம் என்பார் பெருமழைப்புலவர்.

சிவப்பு சிவபெருமானின் நிறத்தையும், பச்சை உமையின் நிறத்தையும் குறித்தது. 

இது நயமான உரைக்குறிப்பே!

3) “ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து”

இங்கு வரும் கங்குல் என்னும் சொல்லும் இருள் என்னும் சொல்லும் பொதுவாக இரவு என்பதைக் குறிக்கப்பயன்பட்டாலும் இவற்றிற்கு இடையே நுண்ணிய வேறுபாடு உண்டு.

“இரவு எப்படி இருக்கும்?” 

“இருட்டாக இருக்கும்!”

 என்பதைப் போன்ற வேறுபாடு இது.

கங்குல் – இரவு

இருள் – இருண்மை

எனவே,

கங்குல் என்பது இரவுப் பொழுது.

இருள் என்பது இரவின் பண்பு. அதாவது இருண்மை என்பதை இச்சொற்களுக்கிடையேயான நுண்ணிய வேறுபாடாகக் கொள்ள வேண்டும்.

4) தந்தையைக் கொன்றானைத் தாளின் கடந்து அட்டு - ‘துரோணாசாரியனைக் கொன்ற  சிகண்டியைத் தன்முயற்சியாலே வென்று கொன்று’

என்ற நச்சினார்க்கினியரின் உரையில் ஒரு புராணப் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள் நச்சினார்க்கினியர் உரைக்குக் குறிப்பெழுதியவர்கள்.

துரோணாச்சாரியனைக் கொன்றவன் திட்டத்துய்மன் என்பதே மகாபாரதத்தில் உள்ளது எனவே இங்கு நச்சரின் உரை பிழையானது என்பர் அவர் கருத்து. 

5 ) அடுத்து முக்கியமான ஓர் உரைமரபு.

நாம் பார்த்த பாடலில் இருக்கும் இந்த வரிகளைப் பாருங்கள்.

அணிமாலைக் கேள்வற் றரூஉமா  ராயர்
மணிமாலை யூதுங் குழல்

இதற்கு எப்படிப் பொருள் கொள்வது?

என்னை விட்டால், இதற்கு,

அணி மாலைக் கேள்வர்க்கு தரூமார்அழகிய மாலையை அணிந்த நம்மவனுக்கே ( கேள்வருக்கே ) நம்மைத் தருவார்கள் ( என்று தலைவி நினைத்தபோது,)

ஆயர் மணிமாலை ஊதுங் குழல்ஆயர்கள் கருமை படரும் மாலைப்பொழுது வர ( போட்டி முடிந்தது என்பதற்கு ) அறிகுறியாகத் தம் குழலை ஊதுகின்றார்கள்.

இன்று நாம் ஏதாவது ஒன்றைச் சொல்லும்போது மணி அடித்தால் அதனை நல்ல சகுனம் என்று சொல்வதைப் போல, தலைவி மனதிற்குள் இதை நினைத்த பொழுது, குழலோசை கேட்டதால் அவளுக்கு இது நல்ல நிமித்தமாகப் பட்டது

என்று பொருள் உரைத்திருப்பேன்.

ஆனால்,

அணிமாலைக் கேள்வற் றரூஉமா  ராயர்
மணிமாலை யூதுங் குழல்

என்னும் இதே இரு அடிகள்,

தோழி கூறுவதாக, நச்சினார்க்கினியர் கைகளில் சிக்கி என்ன பாடுபட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள்.

இவ்வடிகளின் சொற்களை நச்சினார்கினியர் பின்வருமாறு சொல்வரிசையை மாற்றிப் பொருள் கண்டுள்ளார்.

“ஆயர் ஊதுங்குழல் மணிமாலை அணிமாலைக் கேள்வன் தரூமார்”

“ஆயர் ஈண்டு ஊதுகின்ற குழல் நீலமணிபோலுங் காயாம்பூவாற் செய்த மாலையினை  அணியும் இயல்பினையுடைய கேள்வனை நமக்குத் தருதற்கு நன்னிமித்தமாக இசைத்தது காண்! நீ அஞ்சாதேகொள்ளென்றாள்”

இவ்வாறு ஓரடிக்கு உள்ளாகவும், பல அடிகளுக்கு உள்ளாகவும் வருகின்ற சொற்களை எடுத்து, அவற்றைத் தாம் சரியென உணரும் வரிசைப்படி வைத்துப் பொருள் சொல்வது நச்சினார்க்கினியருடைய வழக்கம். எடுத்துக்காட்டாக முதல் அடியில் உள்ள சொல்லை எடுத்து ஏழாவது அடியின் ஒரு சொல்லுடன் சேர்த்துப் பொருள் சொல்வார்.

இலக்கணத்தில் இப்படிப் பொருளுக்குத் தகுந்தவிதத்தில் செய்யுளில் வரும் சொற்களை மாற்றி அமைத்து உரைகாண்பதை, ‘ மாட்டு ’ என்று சொல்வார்கள்.

இம்மாட்டினைச் சில இடங்களில், அளவிற்கு அதிகமாகவே பயன்படுத்தி நச்சினார்க்கினியர் செய்யப்போகும் அபாயகரமான சோதனைகளையும் நாம் பார்க்கத்தான் போகிறோம். “ இது தேவையா? ” என நமக்கே தெரியும் இடங்களில் இந்தப் புலமை மரபைச் சற்று ஓரத்தில் நிற்கச் சொல்லவேண்டிய கட்டாயமும் நேரும். அக்காலத்திய உரைவழக்கு இது என்ற வகையில் பழைய உரைகளை அணுகுகின்றவர்கள் இது குறித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால் குறிப்பிட்டுப் போகிறேன்.

6 ) “அணிமாலைக் கேள்வற் றரூஉமா  ராயர்
    மணிமாலை யூதுங் குழல்”

 என்ற பாடலின் பொருளை எப்படிக் கொண்டாலும், ஆயர் குழலூதுகின்றனர். அவன்  உன் கணவனாவான். என்ற பொருள்தான் இங்கிருக்கிறது.

ஆனால்,‘ நீ அஞ்சாதே! ’ என்ற பொருள் இவ்வரிகளில் இல்லை.ஆனால் நச்சினார்க்கினியர் பொருள் சொல்லும் போது,

“உன் காதலன் உனக்குக் கிடைப்பான் என்பதைச் சொல்வது போல, ஆயரின் குழல்கள் ஒலித்தன என்ற கூற்றின்  வாயிலாக “ நீ அஞ்சாதே ” எனத் தோழி சொல்கிறாள்“ என்ற பாடலில் இல்லாத ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

நீ அஞ்சாதே என்ற கருத்து, இவ்வடிகளில் சொல்லப்படவில்லை எனினும், இவ்வரிகளின் வாயிலாக இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது என அவர் நினைக்கிறார்.

“ நாளைக்குச் செம மழை இருக்குமாண்டா!” என்று ஒரு பள்ளி மாணவனின் சொற்களில் உள்ள குதூகலம் பள்ளி விடுமுறை காரணமாக உள்ளுறைந்திருப்பது என்பதை ஊகித்தல் போன்றது இது.

இப்படி, ஒரு பாடல் அதில் சொல்லப்படாத சொற்றொடரின் பொருளையும் படிப்போர் ஊகித்து உணரும்படி அமைந்திருந்தால் அதற்கு  “ இசையெச்சம் ” என்று பெயர்.

இங்கு நாம் சொல்லாத இன்னும் சில நுட்பங்களும் உள்ளன. வேறு பாடல்கள் வரும்பொழுது அதனைப் பார்ப்போம்.

சரி, இந்த முறையில்தான் இந்தப் பாடலுக்குப் பொருள் கொள்ள வேண்டுமா?

நச்சினார்க்கினியரின் உரைக்கண்ணாடியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நம் கண்களால் இந்தப் பாடலைப் பார்த்தால் எப்படி இருக்கும்?

இதுவரை பார்த்த இப்பாடல் பகுதியை உங்களின் கண்ணோட்டத்தில் கொஞ்சம் யோசியுங்களேன்! சில சுவாரசியங்கள் இருக்கின்றன.

புதிய சாளரங்கள் நிச்சயம் திறக்கும்! பாடலின் இறுதியில் அந்த வாய்ப்புக் குறித்தும் நிச்சயம் பேசுவோம்.

அதுவரை, பொருள் கொள்ளும் உத்திகளில் ஒன்றாக நாம் பார்த்த மாட்டு என்னும் முறைப்படி இதே பகுதியின் பாடலில் நச்சினார்க்கினியர் சொற்களை மாற்றிப் பொருள் கொண்ட சில இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் எவை என்று கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்!

அத்தோடு, இந்த அசைநிலை,  ஆகுபெயர், மாட்டு, இசையெச்சம் என்பதையும் மூளையின் ஒரு மூலையில் போட்டு வையுங்கள்.

அவசரத்திற்கு உதவும்.

தொடர்வோம்.

படஉதவி - நன்றி .https://sp.yimg.com/

6 கருத்துகள்:

  1. என்ன ஒரு அழகான எளிய விளக்கம். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல அந்நாளைய உரையாசிரியர்கள் எழுதியதை பழமை பாராட்டி அப்படியே கையாளாமல் எளிய முறையில் உரையைப் புரிந்துகொள்வதோடு எங்களுக்கும் இங்கே எடுத்துரைத்து விளக்கியிருப்பதற்கு மிகவும் நன்றி விஜி சார்.

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் சகோ.

    இத்தளத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்.

    பதிவைப் படித்ததும் அல்லாமல் கருத்துமிட்டுப் பாராட்டி இருக்கின்ற தங்கட்கு என் மனம்நிறை நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நச்சினார்க்கினியரின் உரைக்கண்ணாடியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நம் கண்களால் இந்தப் பாடலைப் பார்த்தால் எப்படி இருக்கும்? என்று நீங்கள் சொன்னபடி என் பார்வையில் பாடலின் முதல் பகுதி:-

    உயர்ந்த மரக்கொம்புகளில் இருக்கும் உலண்டின் நிறத்தை ஒத்த
    வெளிறிய நிறத்தைக் கொண்ட எருதின் சிறுத்த கண்களின் பார்வையைக் கண்டு அஞ்சாமல் பாய்ந்த இடையனைக் கொம்பினால் சாகுமாறு குத்தி அவன் உடலைச் சின்னாபின்னமாகக் குலைக்கும் தோற்றத்தைக் காண்பாய்!
    அழகான, சீராக அசைகின்ற இயல்பையுடைய துரோபதையின் மெல்லிய கூந்தலைப் பிடிக்கக் கைநீட்டிய துச்சாதனின் நெஞ்சைப் பிளந்து பகைவர் நடுவே தான் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய பீமனைப் போல இருக்கின்றது.
    (அம்சீர் அசையியல் கூந்தல் என்பதற்கு எனக்குப் பொருள் தெரியவில்லை என்பதால் எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன். உரையாசிரியர்கள் இல்லாமல் போயிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு என்னுடைய இந்த மனம் போனபடி பொருள் கொள்தல் ஓர் எடுத்துக்காட்டு)
    அடுத்த பகுதிகளும் விரைவில்!

    பதிலளிநீக்கு
  4. பொருள் கொள்ளும் உத்திகளில் ஒன்றாக நாம் பார்த்த மாட்டு என்னும் முறைப்படி இதே பகுதியின் பாடலில் நச்சினார்க்கினியர் சொற்களை மாற்றிப் பொருள் கொண்ட சில இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் எவை என்று கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்!

    என் கண்ணில் பட்டவை இவை மட்டுமே:-

    1. தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்

    தந்தையைக் கொன்றானைத் தாளின் கடந்து அட்டு

    2. செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை

    செவி மறை மின்னும் நுண் பொறி நேர் வெள்ளை


    பதிலளிநீக்கு
  5. ஆகா! ஆகா! ஆகா! என்ன சொல்ல! ஏது சொல்ல!! சொல் எச்சம், இசை எச்சம், இருமடி ஆகு பெயர் இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் ஐயா கேள்வியே படுகிறேன். தமிழ் மீதான மதிப்பும் மலைப்பும் இன்னும் இன்னும் வானளாவுகின்றன! தங்கள் வலைப்பூவைப் பார்க்க நேர்ந்தது என் பேறு என்பதைத் தவிர வேறு ஏதும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. கண்டிப்பாக இதையும் தாங்கள் மிகையாகவும், அன்பு காரணமான சொற்களாகவும்தாம் எடுத்துக் கொள்வீர்கள் என அறிவேன். ஆனால், என்னைப் பொறுத்த வரை இவை நூற்றுக்கு நூறு உண்மை!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா,

    எனக்கு என்ன சொல்வது என்றே தெரியல, ஒரு காலத்தில் ஏன் செய்யுள் வரிகளுக்கு இந்த உரையாசிரியர்கள் சொன்னதைத் தான் படிக்கனமா? நாமே பொருள் சொல்லக் கூடாதா? கேள்வி கேட்டு, அது குறித்து என் ஒத்த அலைவரிசை உடைய தோழியருடன் வாதிட்டு, ஏன் பட்டிமன்றம் வைத்ததும் உண்டு. என் கல்லூரி காலங்களில் மிக பரப்பரப்பாக பேசப்பட்டது இவ்விடயம்,,, அதன் பிறகு நான் சந்தித்த பாதையில் தாங்கள் தான்,, நம் பார்வையும் பார்ப்போமே,,,
    அது என்னமோ நாம் அவர்களை குறைசொல்வதாக நினைத்து வேண்டாம் என்று,,,
    என் முனைவர் பட்ட ஆய்வேட்டின் போது இது போல் நிறைய அனுபவித்தேன்,, எனக்கும் இப்போ ஆசை,
    அரும்பதவுரையாரையும் அடியார்க்குநல்லாரையும் எதிரில் நிறுத்தி ,,, ஐயா இது சரியா பாருங்கள் எனச் சொல்ல,,,

    ஆனால் பாழாய் போன தயக்கம் பயம் இப்ப புதுசா எனக்குள் எங்கிருந்து என்று தெரியல,
    ஆனா ஒரு நம்பிக்கை, தாங்கள் சொல்வீர்கள் தானே சரி இல்ல தவறு என்று,, அது மட்டும் போதும்,,,,
    தொடருங்கள் நல்ல எளிய நடையில் புரியும் விளக்கம், அனைவருக்கும் பயன்படும்,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் சுவடுகள் தடங்களாகட்டும்.